கும்பகோணம் அருகே வயல் திருவிழா திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து அசத்தல்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மலையப்பநல்லூரில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல்லுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவில் உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவத்தை  இயற்கை விவசாயி இளங்கோவன் நாற்றுகள் மூலம் நடவு செய்து அசத்தினார்.

நேபாளத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகம், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தால் 50 அடி நீளம், 45 அடி அகலத்தில் திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார். இந்த வகை நெல் ரகங்கள் காபி கலரில் இருக்கும். இந்த விழாவில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் பங்கேற்று திருவள்ளுவர் உருவ நடவை பார்வையிட்டனர்.

இதுகுறித்து விவசாயி இளங்கோவன் கூறுகையில், இயற்கை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். 2,000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதியுள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில் உள்ளேன். திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடுவதற்கு கடந்தாண்டு முதலே நினைத்து வந்தேன்.

அதை இந்தாண்டு நிறைவேற்றியுள்ளேன். இதை கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக செய்தேன். எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நடவு செய்ய உள்ளேன் என்றார்.

Related Stories: