ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கவில்லை: சேலத்தில் பி.டி.உஷா பேட்டி

சேலம்: ராஜ்யசபா எம்பி பதவியை நான் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறது என சேலத்தில் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறினார். சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 7 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடந்தது. இந்த போட்டியை முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி எனக்கு வழங்கியிருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கவுரவம் ஆகும். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். நான் இதனை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது, விளையாட்டு துறை சார்ந்த கோரிக்கைகளை அதிகமாக வைப்பேன்.

தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ்சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். நாங்கள் விளையாடிய காலத்தில் விளையாட்டுத்துறைக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பெற்றோர் குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்களும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: