திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா?: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே குருவாயூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த இரும்புத்துண்டு மீது மோதியதில் ரயில் பெட்டியின் படிக்கட்டு சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மதுரை வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை சென்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசன் அருகே மாலை 5.45 மணியளவில் ரயில் சென்றபோது திடீரென ரயிலில் சப்தம் அதிகமாக கேட்கவே இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ரயிலில் இருந்து இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் இறங்கி பார்த்தபோது ரயில் தண்டவாளத்தின் நடுவே ரயில்வேயின் இரும்புத்துண்டுகள் உடைந்து சுக்குநூறாக கிடந்தது. இதில் வேகமாக வந்த ரயில் ஏறி இறங்கியதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் பெட்டி ஒன்றின் படிக்கட்டு உடைந்திருந்தது.

இதே போல் ரயில் கடந்து சென்ற பகுதியில் ஸ்லீப்பர் கட்டைகளில் சில உடைந்து காணப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஜின் டிரைவர் இதுகுறித்து கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் மூலம், விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதன்பின்பு ரயில் மெதுவாக இயக்கப்பட்டு கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசனில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சேதமடைந்த படிக்கட்டு அகற்றப்பட்டு, குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணி நேர காலதாமத்திற்கு பின்பு கள்ளிக்குடியிலிருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்டு சென்றது. சம்பவம் குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் இரும்புத்துண்டு கிடந்தது ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பணி செய்யும்போது விட்டு சென்ற இரும்புத்துண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நின்றிருந்த தண்டவாளம் பகுதி முழுவதையும் போலீசார் சோதனையிட்டனர். அந்த நேரத்தில் வேறு எந்த ரயில்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் கள்ளிக்குடி போலீசாரும் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: