குழந்தைகள் முன்பு நிர்வாண போஸ்; பிரபல நடிகர் அதிரடி கைது!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் பூங்காவில் குழந்தைகள் முன்பு நிர்வாண போஸ் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள வில்லன் நடிகரான ஜித் ரவியை போலீசார் இன்று கைது செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜித் ரவி (46). பழம்பெரும் மலையாள வில்லன் நடிகரான டி.ஜி.ரவியின் மகன் ஆவார். மயூகம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து சாந்துப்பொட்டு, திருச்சூர் பூரம், குயின், ராமலீலா, புண்ணியாளன் அகர்பத்தீஸ் உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்து உள்ளார். வில்லன் வேடங்களில் மட்டும் இல்லாமல் நகைச்சுவை, குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் வேட்டை, கும்கி, மதயானைக் கூட்டம், கதகளி, அசுர வதம், ஆயிரத்தில் இருவர் உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சூரில் உள்ள ஒரு பூங்காவில் வாலிபர் ஒருவர் குழந்தைகளின் முன்பு நிர்வாண போஸ் கொடுத்ததாக திருச்சூர் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பூங்காவில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர். அப்போது நிர்வாண போஸ் கொடுத்தது நடிகர் ஜித் ரவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை திருச்சூரில் உள்ள வீட்டில் ஜித் ரவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாலக்காட்டில் வைத்து இதே போல குழந்தைகள் முன்பு நிர்வாண போஸ் கொடுத்ததாக நடிகர் ஜித் ரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த செயலில் ஈடுபட்டது தான் அல்ல என்றும், தன்னைப்போல வேறொருவர் என்றும் அப்போது ஜித் ரவி கூறினார். திருச்சூரில் தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய பின்னரே ஜித் ரவியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories: