வால்பாறையில் கனமழையால் மண்சரிவு; அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சூறாவளி காற்று வீசுவதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகிறது. சாலையோர மரங்கள் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்றும் வால்பாறை முழுவதும் கனமழை பெய்தது.

வால்பாறை நகராட்சி மைதானம் அருகே 30 அடி உயர பாதுகாப்பு சுவர் மேல்புறத்தில் சாந்தா, ஜோசப் ஆகியோரது குடியிருப்புகள் உள்ளன. மழையால் அந்த பாதுகாப்பு சுவர் பலவீனம் அடைந்திருந்தது. நேற்று சுவரோடு வீடும் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. வால்பாறை காமராஜ் நகரில், வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் 30 அடி உயர பாதுகாப்பு சுவர் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தவிர அதே பகுதியில் பாதுகாப்பு சுவர் இடிந்ததால் மலைச்சரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா குடியிருப்பு பகுதியில் சாந்தி என்பவர் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றின் குறுக்கே நூற்றாண்டு பழமையான பாலம் உள்ளது. தற்போது இந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. மசினகுடி, ஊட்டி செல்லும் வாகனங்கள் செல்வதற்காக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிமென்ட் தரைப்பாலம் உபயோகத்திற்கு விடப்பட்டுள்ளது.

தெப்பக்காடு வரவேற்பு முகாம் பகுதியில் இருந்து யானை முகாமிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் நடந்து சென்று வருவதற்காக இந்த ஆற்றின் குறுக்கே மண் நிரப்பப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து தரைப்பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

Related Stories: