வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மோகன்(65). இவரது மனைவி வளர்மதி. ஒரே வீட்டில் மோகன், வளர்மதி, அவர்களது மகன் ஆனந்தகுமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். மற்றொரு மகன் அப்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மற்றொரு மகன் வீட்டிற்கு வளர்மதி சென்றார். வீட்டில் மோகன் மற்றும் ஆனந்தகுமார் மட்டும் இருந்தனர்.

 நேற்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்படுவது போன்று சத்தம் கேட்டது. இருவரும் வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. இதனால் இருவரும் மீண்டும் தூங்குவதற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள ஒரு அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அந்த அறையிலிருந்த பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்கம், வைர நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: