திருத்திய திட்ட அறிக்கை வெளியீடு பள்ளி, கல்லூரிகளில் 10371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிகளில்  நிரப்ப வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அவற்றுக்கான போட்டித் தேர்வுகள் நடக்கும் தேதி, ஆகியவை குறித்த திருத்திய திட்டப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி 10371 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் அனைத்து மாநிலங்களிலும் 2010ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றால் அவர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுத்தான் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி அதன் மூலம் ஆசிரியர்களை தெரிவு செய்து பணியில் அமர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இடையில் சில பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்த காரணத்தால் 3 ஆண்டுகள் மேற்கண்ட தேர்வு நடத்தப்படவில்லை. வழக்குகள் முடிந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி்த் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், 6க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்ட அவலநிலை ஆகியவற்றால் பள்ளிக் கல்வித்துறையே தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. அதனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் குளறுபடிகள் நீடித்து வந்தன. தற்போது, பள்ளிக் கல்வித்துறையில் நீடித்து வந்த பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிலவிய முறைகேடுகள் களையப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் காலி ஏற்பட்டுள்ளன. அவற்றை நிரப்புவதற்கான பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் ஈடுபட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, லட்சக் கணக்கான ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையைப் போல அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகள் நடத்தி அதில் தெரிவு செய்யப்படும் நபர்கள் பணியிடங்களில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கிடையே, நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் அதற்காக இந்த ஆண்டில் நடத்த உள்ள போட்டித் தேர்வுக்கான திட்ட அறிவிப்பில் சில திருத்தங்களை செய்து அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு 10371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது  குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2404 உள்ளன. அதற்கு  ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு  நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வு நடக்க உள்ளது.

மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய விரிவுரையாளர்கள்பணியிடங்கள் 155 உள்ளன. அதற்கான அறிவிப்பு ஜூலை 2022ல் வெளியாக உள்ளது. இதற்கான போட்டித் தேர்வு அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் 1874 உள்ளன. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 3987 உள்ளன. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும். போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிஎட் கல்லூரிகள்  ஆகியவற்றில் உள்ள 1358  உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு  உரிய அரசாணை வெளியானதும் அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 493 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டதற்கு பிறகு வெளியிடப்படும். தேர்வு குறித்த விவரங்களும் பின்னர் அறிவிக்கப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அரசாணைக்கு பிறகு வெளியாகும். தேர்வுக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories: