சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உள்பட 6 பேர் கொண்ட குழு மருத்துவர்கள், போலீசிடம் விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரோடு 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு தொடர்பாக ஏற்கனவே காவல்துறை, மருத்துவத்துறை உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் தற்பொழுது தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஈரோட்டில் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த சிறுமியின் கருமுட்டையை, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் இரண்டாவது கணவர் ஆகியோர் 8 முறை சிறுமியை அழைத்து சென்று ஈரோடு, சேலம், ஓசூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கருமுட்டையை விற்பனை செய்ததாக அந்த சிறுமியே புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் உள்ளிட்ட 4 பேர் போக்ஸோ வழக்கு பதியப்பட்டு அவர்களை சிறையில் அடைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ உயர்மட்ட குழுவினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் குழந்தையின் உரிமை மீறப்பட்டுள்ளதா எனவும் தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையின் நிலை குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: