உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதிபாளையம் கிராமத்தில் சாய்பாபா கோவில் அருகே காலி இடத்தில் நேற்று வயது முதிர்ந்த பெண் யானை ஒன்று எழ முடியாமல் படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் யானை நடக்க முடியாமல் உடல் நலம் குன்றிய நிலையில் படுத்து கிடப்பதை கண்டு உடனடியாக ஆசனூர் மாவட்ட அலுவலர் தேவேந்திர குமார் மீனாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உடல் நலம் குன்றிய காட்டு யானைக்கு குளுக்கோஸ் மற்றும் ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தார்.

தொடர்ந்து காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காட்டு யானை எழுந்து நிற்பதற்கு ஏதுவாக சம்பவ இடத்தில் பொக்லைன் இயந்திரம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக காட்டு யானை உடல் நலம் குன்றிய நிலையில் படுத்து கிடப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: