தொடரும் உயிரிழப்பை தடுக்க களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உயர்மட்ட பாலம்: கிராம மக்கள் கோரிக்கை

களக்காடு:  களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிதம்பரபுரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், வெளியூர்களுக்கு செல்லவும் களக்காட்டிற்கு தான் வரவேண்டும். சிதம்பரபுரத்தை சேர்ந்த பலர் களக்காட்டில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர். இப்பகுதி மாணவ-மாணவிகளும் களக்காடு பள்ளிகளில் படிக்கின்றனர். சிதம்பரபுரம் கிராம மக்கள் நாங்குநேரியான் கால்வாய் தரை பாலத்தை கடந்துதான் களக்காட்டிற்கு வரவேண்டும். களக்காடு-சிதம்பரபுரத்தை இணைக்கும் இந்த பாலம் 1975ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 45 ஆண்டுகளை கடந்து விட்டதால் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. பாலத்தின் தடுப்பு தூண்கள் இடிந்து, சிதிலமடைந்துள்ளது. மழைக்காலங்களில் நாங்குநேரியான் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் வரும்போது தரைப்பாலம் மூழ்கி விடுகிறது. பாலத்தின் கீழுள்ள குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் காரணமாகும்.

சிதம்பரபுரம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாகி விடுகிறது. இதனால் சிதம்பரபுரத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது பாலத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்துள்ளார். மேலும் நாங்குநேரியான் கால்வாயின் இரு கரைகளிலும் கடும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. வெள்ளத்தில் மூழ்கும் போதெல்லாம் பாலத்தின் உறுதி தன்மையை இழந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி ஜவஹர் கூறுகையில், ‘நான் சிறுவனாக இருக்கும் போதே பாலம் இப்படித்தான் உள்ளது. அதே நிலை 40 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. சிதம்பரபுரம் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் களக்காட்டுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வந்தால் பாலம் மூழ்கி விடுகிறது.

இதனால் களக்காட்டிற்கு சென்ற சிதம்பரபுரம் மக்கள் ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. சிலர் உயிரை பணயம் வைத்து வெள்ளத்தை கடந்து ஊருக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தப்பியவர்களும் உண்டு. பலியானவர்களும் உண்டு.

கடந்த நவம்பரில் பாலத்தை கடத்து வந்த கர்ப்பிணி பலியான போது நாங்கள் உயர்மட்ட பாலம் வேண்டி போராட்டங்கள் நடத்தினோம். அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பாலம் அமைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தனர். ஆனால் பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. ஏற்கனவே பாலம் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இனியொரு முறை பாலத்தின் மீது வெள்ளம் சென்றால் அரிப்பு ஏற்பட்டு பாலம் முழுவதும் அடித்து செல்லப்படும் சூழல் நிலவுகிறது. எனவே தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்” என்றார். அப்பகுதி மக்களின் முக்கிய தேவைகளில் இதுவும் ஒன்றாகும்.

 இதுகுறித்து களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் கூறியதாவது, சிதம்பரபுரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கர்ப்பிணி உயிரிழந்தது துயரமான சம்பவம். இனி அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கையாக உள்ளோம். மழைக்காலங்களில் அடிக்கடி அந்த பாலத்தை கண்காணித்து வருகிறோம். சிறிய மழை பெய்தால் கூட பாலத்தில் ஏற்படும் அடைப்புகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. புதிய உயர்மட்ட பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நகராட்சியின் நிதி தேவை அதிகமாக உள்ளது. தற்போது கூட நாங்கள் சென்னை சென்று அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்துள்ளோம். அவர்களும் நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர். எனவே களக்காடு-சிதம்பரபுரம் தரைப்பாலம் அகற்றப்பட்டு, விரைவில் புதிய உயர் மட்ட பாலம்

கட்டப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories: