ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்; 10 வயது சிறுவன் கொடூர கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சைத்பூர் கிராமத்தை சேர்ந்தவன் ப்ரணே குமார் (10). இவன் வழக்கம் போல நேற்று மாலை டியூஷன் சென்றான். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் இல்லாததால் போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில், நள்ளிரவில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. சந்தேகத்தின் பேரில் அதை பிரித்து பார்த்தனர். அதற்குள், ப்ரணே குமார் உடல் இருந்தது. போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கதுவாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆர்.சி.கோட்வால் கூறுகையில், சிறுவனை டேப்பால் வாயை மூடி, கைகால்களை கட்டிய நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். உடலில் காயங்கள் இருந்தன.

கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும்’ என்றார். இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: