கனமழைக்கு நீரில் அடித்து செல்லப்பட்ட மாயாற்றின் தற்காலிக தரைப்பாலம்

கூடலூர்:  கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றின் குறுக்கே நூற்றாண்டு பழமையான பாலம் உள்ளது. தற்போது இந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. மசினகுடி, ஊட்டி செல்லும் வாகனங்கள் செல்வதற்காக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிமென்ட் தரைப்பாலம் உபயோகத்திற்கு விடப்பட்டுள்ளது. தெப்பக்காடு வரவேற்பு முகாம் பகுதியில் இருந்து யானை முகாமிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் நடந்து சென்று வருவதற்காக இந்த ஆற்றின் குறுக்கே மன் நிரப்பப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து தரைப்பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெப்பக்காடு பகுதியில் இருந்து யானை முகாமிற்கு செல்லும் வனப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் வாகனங்கள் செல்லும் தரைப்பாலத்தின் வழியாக சென்று சுமார் 2 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சுற்றிவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காலத்தில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வாகனங்கள் செல்லும் தரைப் பாலத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வாகனங்கள் சென்று வந்த நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பாலத்தின் பணிகள் வேகமாக நடைபெறாததால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: