கொதுமுடி நீரோடையில் தூர் வார விவசாயிகள் கோரிக்கை

ஊட்டி: கொதுமுடி நீரோடையில் தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் செய்து வருகிறார்கள்.  விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை விவசாய  நிலங்களுக்கு நடுவே செல்லும் நீரோடைகளில் இருந்து எடுத்து பயன்படுத்தி  வருகின்றனர். குறிப்பாக, கோடை காலங்களில் குளங்கள் மற்றும் குட்டைகளில்  தண்ணீர் வற்றும் நிலையில், இந்த நீரோடைகளே விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது.

இந்நிலையில்,  ஊட்டி தொட்டபெட்டாவில் இருந்து கொதுமுடி வழியாக ஒரு நீரோடை செல்கிறது.  இந்த நீரோடையின் இரு புறங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம்  மேற்கொள்ளப்படுகிறது. நீரோடையின் இரு புறங்களில் விவசாய நிலங்கள்  வைத்துள்ளவர்கள் இந்த நீரோைடயையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த நீரோடையில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத நிலையில், சேறும்,  சகதியும் நிறைந்து காணப்படுகிறது. சில இடங்களில் புதர் செடிகளும்  வளர்ந்துள்ளது. இதனால், கன மழை பெய்தால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்  புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை காலங்களில் விவசாயத்திற்கு  தேவையான தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்படும். எனவே, இந்த நீரோடையில் தூர்  வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: