மின்மயமாக்கப்பட்ட அகல ரயில்பாதை கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான பொள்ளாச்சியில், 1915ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில் சேவை  துவங்கப்பட்டது. முதலில் கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில் இயக்கப்பட்டது.அதன்பின் 1928ம் ஆண்டு முதல் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், அதன்பிறகு 1932ம் ஆண்டு பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கும் அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்பட்டன.மீட்டர் கேஜாக ரயில்பாதை இருந்த போதும்  பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, கோவை, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ரயில் சேவை தொடர்ந்தது. இந்த மீட்டர் கேஜ் இருப்பு பாதையை மாற்றி, அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 2008ம் ஆண்டு ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 2009 ஆண்டு முதல், திண்டுக்கல் போத்தனூர் வரையிலான அகல ரயில் பாதைக்கான பணி துவங்கி , சுமார் 8 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தது.

 இதையடுத்து 2 ஆண்டுக்கு முன் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, பழனி வரையிலும் மின்மயமாக்கல் பணி துவங்கியது.தற்போது மின்மயமாக்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மீட்டர் கேஜ் ரயில்பாதையாக இருந்த போது, அதில்  ராமேஷ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில், விருநகர் மற்றும் கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில், சுற்றுலாத்தலமான கன்னியாக்குமரி பகுதியை சேர்ந்த  தென்மாவட்ட மக்கள் அதிகளவில் வசிப்பதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலும் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ள இத்தருணத்தில் பொள்ளாச்சியில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மட்டுமின்றி, சென்னை, திருச்சி, மதுரை உளள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில் இயக்க வேண்டும் எனவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட, அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி  ரயில்வே ஸ்டேஷனில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் ரயில்வே பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கிணற்று மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. பின் சுமார் 50ஆண்டுக்கு முன்பே, அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து, அங்கேயே சுத்திகரிக்கப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது.ஆழியாற்றிலிருந்து எடுக்கப்பட்ட குடிநீரானது, பிரதான குழாய் மூலம் சுமார் 12 கி.மீ தூரம் கடந்து, ரயில்வே ஸ்டேஷனில்  உள்ள ஒரு பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கீழ் நிலை தொட்டியில் நிரப்பப்பட்டது. ஆனால், இந்த நிலை கடந்த 2008ம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது. அதன்பின் அகல ரயில்பாதை பணி துவங்கிதும், ஆழியாற்றிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு குடிநீர் வினியோகிப்பது ரத்தானது.

அகல ரயில் பாதை பணி நிறைவடைந்தவுடன். அதற்கு பதிலாக ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் உப்பு நீரே (சப்பை தண்ணீர்) வினியோகிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குடிநீர் வினியோகத்திற்காக, அங்குள்ள ஒரு பகுதியில் பெரிய அளவில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், ஆழியாற்று குடிநீர் வினியோகம் என்பது, கடந்த 10ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் ஆங்காங்கே உள்ள குழாய்களில், இன்னும் தொடர்ந்து போர்வெல் தண்ணீரே வினியோகிக்கப்படுகிறது.

இது பயணிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது, குடிநீர் நிரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட தரைமட்ட தொட்டியை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து இருப்பதுடன்,பராமரிப்பு இல்லாமல் விஷஜந்துக்கள் நடமாடும் இடமாக உள்ளது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளுக்கு வசதியாக, ஆழியாற்று தண்ணீரே சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை மீண்டும் தொடர வேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: