ஆடி மாதப்பிறப்பு எதிரொலி மேட்டூர் காவிரியில் ஆழமான பகுதிகளில் குளிக்க தடை: பேனர் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை

மேட்டூர்: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, மேட்டூர் காவிரியில் அழமான பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் ஆடி முதல் நாள் அன்றும், ஆடிப்பெருக்கு தினத்தன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மேட்டூர் காவிரியில் புனித நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து விட்டு செல்வார்கள். தலையில் அருகம்புல் மற்றும் நாணயங்களை வைத்து, காவிரியில் முங்கி, கடவுளை வழிபட்டு செல்வது வழக்கம். மேலும், புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது, தாங்கள் அணிந்திருந்த மாலைகளை வாழை இலையில் வைத்து, வழிபட்டு காவிரியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பின்னர், புது தாலி கயிறு மாற்றி வழிபடுகின்றனர். இந்நிலையில், மேட்டூர் அணைகட்டு முனியப்பன் கோயில் அருகே மட்டம் பகுதியில் ஏராளமானோர் நீராடுகின்றனர். அப்போது அங்குள்ள பாறை இடுக்கில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வரும் 17ம் தேதி ஆனி மாதம் நிறைவடைந்து, ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் வருவார்கள் என்பதால், முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு வரும் இளைஞர்கள் மேட்டூர் கால்வாயில் குளிக்கும் போது, தடை செய்யப்பட்ட ஆழமான பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் விதமாக, சுறறுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆழமான பகுதிகளில் குளிக்க கூடாது என மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதே போல், மேட்டூர் 4 ேராட்டில் உள்ள பாலம் அருகேயும், நீர்ச்சுழல் நிறைந்த புதை குழி பகுதியில் குளிக்க கூடாது எனவும் தடை விதித்து எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சேத்துக்குளியில் ஒரு மாதத்திற்கு முன், பள்ளி சிறுமிகள் இருவர் பாட்டியுடன் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த கரை பகுதியிலும், எச்சரிக்கை வாசகங்கள்அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மட்டம் பகுதியில் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், பாதுகாப்பாக குளிக்கவும் நீர்வளத்துறை, வருவாய் துறை மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் புதர்களை அகற்றும் பணி, தற்காலிகமாக குளியலறை மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட ஆழமான பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் விதமாக, சுறறுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆழமான பகுதிகளில் குளிக்க கூடாது என மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: