வேலூர் கோட்டையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கும் காற்றாலை, சோலார் பேனல்கள்: சீரமைத்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை இரவிலும் ஜொலிக்கும் வகையில் ₹90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட காற்றாலை, சோலார் ேபனல்கள் சிதலமடைந்து கிடக்கிறது. இதனை சீரமைத்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் கோட்டை 16ம் நூற்றாண்டில் வேலூர் கோட்டை விஜயநகர பேரரசு ஆட்சியின்போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டமைக்கப்பட்டது. ஆற்காடு நவாபுகளின் பொறுப்பிற்கு சென்ற கோட்டை 1760 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற ஆங்கிலேயர்கள் அவருடைய மகன்களை இக்கோட்டையினுள் தான் சிறை வைத்திருந்தனர். வேலூர் சிப்பாய் புரட்சி என்னும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில் தான் நடைபெற்றது. இதனால் தான் இன்றும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக இந்த வேலூர் கோட்டை அமைந்துள்ளது. 136 ஏக்கர் பரப்பளவில் இந்த கற்கோட்டை கட்டப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் கோயிலுடன் கூடிய வேலூர் கோட்டை இன்று இந்தியாவில் நல்ல வலுவுடன் உள்ள தரைக்கோட்டைகளில் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோட்டையை சுற்றி சராசரியாக 191 அடி அகலமும், 29 அடி ஆழமும், மொத்தமாக 1516 அடி அகலமும், 2553 அடி நீளமும் கொண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இக்கோட்டையின் அழகை இரவில் கண்டு ரசிக்க முடியாது. அத்துடன் பகலிலும் கோட்டையை முழுமையாக சுற்றி பார்க்க முடியாத அளவில் முட்புதர்கள் மண்டியிருந்தது மட்டுமின்றி, சமூக விரோதிகளின் நடமாட்டமும் இருந்ததால் வேலூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வெறும் கோயிலுக்கு மட்டும் வந்து செல்லும் நிலை இருந்தது.இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த அஜய்யாதவ் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். கோட்ைடயின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் அகழியில் படகுகள் விடப்பட்டன. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோட்டையை சுற்றிலும் இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் வண்ண மின்விளக்குகளையும், வேலூர் கோட்டையின் அழகை கூட்ட மதில்சுவர் கீழ் பகுதியில் வீரவாள் ஏந்திய சிப்பாய் வீரர்கள் நிற்பது போல 10 பொம்மைகளும் அமைக்கப்பட்டன. இரவு நேரங்களில் மின்விளக்குகளில் கோட்டை ஜொலிக்கும் வகையில் சோலார் மற்றும் காற்றாலை வசதியுடன் கூடிய விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி இதற்கான மின்தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்கள் பங்களிப்பு ₹30 லட்சம், அரசின் நிதி ₹60 லட்சம் என ெமாத்தம் ₹90 லட்சம் மதிப்பீட்டில் காற்றாலை விசிறிகளும், சோலார் பேனல்களும் கோட்டை சுற்றுசுவரில் அமைக்கப்பட்டன. காற்றாலை மூலம் 10 கே.வி மின்சாரமும், சோலார் தகடுகள் மூலம் 10 கே.வி மின்சாரத்தையும் பெற்று வேலூர் கோட்டை மின்விளக்கு வெளிச்சத்தில் சிப்பாய் பொம்மைகளுடன் ஜொலித்தது. ஆனால் இக்கட்டமைப்பு பராமரிப்பு இன்றி நாளடைவில் பழுதடைந்தது. சோலார் மின்சாதன பொருட்கள், ஒயர்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர். காற்றாலைகள் பழுதடைந்தும், சிப்பாய் பொம்மைகள் உடைந்து உருக்குலைந்தும் போயின. விளக்குகள் ஒவ்வொன்றாக காணாமல் போயின. ஆனால் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது அந்த பொம்மைகள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.

இந்த திட்டம் தொடங்கிய காலத்தில் கோட்டையை ரசிக்க சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஆனால் அந்த திட்டத்தை மேம்படுத்தாமலும், பராமரிப்பு இன்றி விட்டதால் தற்போது வேலூர் கோட்டை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் வேலூர் கோட்டை முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பொற்கோயில் போன்ற சுற்றுலாதலங்களுக்கு சென்றுவிட்டு திரும்பும் சுற்றுலா பயணிகள் இரவில் கோட்டையை பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.வளர்ந்து வரும் மாநகராட்சியாக வேலூர் திகழ்ந்து கொண்டு உள்ளது. மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை தீட்டினால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேலூர் கோட்டையில் சிதலமடைந்து கிடக்கும் சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகளை சீரமைப்பதுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கைவிரிக்கும் மத்திய தொல்லியல்துறை

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான அலுவலகமும் கோட்டையின் நுழைவுவாயிலில் உள்ளது. வேலூரில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் கோட்டையை சுற்றிப்பார்க்கும் வகையில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. அதோடு கோட்டைக்குள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்தோ, வளர்ச்சி திட்ட பராமரிப்பு பணிகள் குறித்தோ தொல்லியல் துறை கண்டு கொள்வதே இல்லை. எதைக்கேட்டாலும் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றே தொல்லியல்துறை அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். இனியாவது மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுடன் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளும் இணைந்து சுற்றுலா வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

வேலூர் கோட்டையை முழுமையாக பழமை மாறாமல் புனரமைப்பது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ெடல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் முழுமையாக புனரமைத்து அழகுப்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில் சிறிய அளவில் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் கலெக்டரின் நிதியில் இருந்து வேலூர் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மற்றும் சோலார் பேனல்கள் பழுதடைந்து கிடக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதோடு அவற்றை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரம் குறித்தும் பராமரிக்க நியமிக்கப்பட்ட நபர் என்ன ஆனார் என்பது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் பராமரிப்பற்று கிடக்கும் சோலார் பேனல்களையும், காற்றாலையையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கோட்டையை மின்னொளியில் ஒளிர செய்ய வேண்டும். அதோடு பராமரிப்பு நிதி ஒதுக்கி அதற்காக தனியாக நபர்களை ஒதுக்க வேண்டும். அப்போது தான் திருட்டு சம்பவங்களையும் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீண்டும் படகு சவாரி  

வேலூர் கோட்டையை சுற்றுலா பயணிகள் படகு மூலம் கண்டுகளிக்கும் வகையில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் படகு சவாரி மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டினர். சுற்றுலா துறை மூலம் நல்ல முறையில் இயங்கி வந்து வருமானமும் அதிகரித்தது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு வருமானம் தேவை என்ற அடிப்படையில் படகு குழாம் வேலூர் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் முறையற்ற பராமரிப்பால் அனைத்து படகுகளும் சிதிலமடைந்ததுடன் படகு சவாரியும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் படகு சவாரி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: