ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேமில் ஆசனாம்பட்டு ரோட்டில் ஆம்பூர் நகராட்சி நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பெத்லகேம், கம்பிக்கொல்லை, மாங்காதோப்பு, ரெட்டிதோப்பு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 376 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று உலகளாவிய வகுப்பறை பரிமாற்ற நிகழ்ச்சியின் கீழ் ஸ்கைப் மூலம் மலேசிய நாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சஞ்சனா, திவ்யா, காவியா, ஹரிஸ் உள்ளிட்ட 10 மாணவர்கள் பங்கேற்றனர். நகராட்சி பள்ளி ஆசிரியர் சரவணன் கஹூட் எனும் மென்பொருள் வாயிலாக வினாடி வினா தயார் செய்து இரு நாட்டு மாணவர்களையும் பங்கேற்க செய்தார்.
இதில் இரு நாட்டு மாணவர்களும் மொழி, கற்றல் வழி, உரையாடல் உள்ளிட்டவைகளில் இன்றைய நவீன யுக்திகளை ஆங்கிலத்தில் உரையாடி பரிமாறி கொண்டனர்.நிகழ்ச்சியில் மலேசியாவில் டெரங்கனு பகுதியில் உள்ள பள்ளியை சேர்ந்த ஆசிரியர் முஹம்மத் ரெஸ்துஹான் தலைமையில் சுமார் 10 மாணவர்கள் கலந்துரையாடினர். சுமார் ஒரு மணி நேர கலந்துரையாடலில் பெத்லகேம் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உதவினர்.