நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தது. அதாவது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தவில்லை, அதனால் மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனுக்குடன் அமல்படுத்தும் போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதே சமயம் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த முடியாவிட்டால் அதனை எதிர்த்து குறித்த காலத்திற்குள் மேல் முறையீடு செய்யலாம், ஆனால் அதையும் அரசு அதிகாரிகள் செய்வதில்லை என்று வேதனையுடன் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்ப்பதற்காக நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இந்த கடிதத்தின் நகலையும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த கடித நகலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: