வெள்ளத்தில் மிதக்கும் மும்பை; புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை.! அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை

மும்பை: மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இடைவிடாத மழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு மும்பையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் 107 மி.மீ மழை பெய்துள்ளது.

கிழக்கு மற்று மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை பெய்துள்ளது. சில ஆறுகளில் தண்ணீ்ர அளவு அதிகரித்து வருகிறது. சதாரா மாவட்டம், பிரதாப்காட் போராட் அருகே மழை காரணமாக இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. திருஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வானிலை ஆய்வு மையம் “ரெட்” மற்றும் “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிருஹன்மும்பை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மேலும், பல்வேறு பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புப் பணிக்கு ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். வெள்ளம் ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து இதுவரை 3,500 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories: