இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் வாழ்த்து!!

புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி. உஷா உள்ளிட்ட 4 பேருக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது தவிர, சிம்பொனி இசையமைத்த ஒரே இந்திய இசைக்கலைஞராவார். இந்நிலையில், இளையராஜா, கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை பிடி. உஷாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி @ilaiyaraaja அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!, எனத் தெரிவித்துள்ளார். அதே போல், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத  @ilaiyaraaja

 அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்,என்றார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்து சாதனைகள் பல புரிந்த இளையராஜாவின் தேசப்பணி சிறந்து விளங்க வாழ்த்துகள், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: