என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

மதுராந்தகம்:  என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுராந்தகம் அரசு பள்ளி மாணவிகள் ஆயிரம் பேர் நேற்று உறுதிமொழி ஏற்றனர். நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின்   தொடங்கி வைத்தார். இது குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மதுராந்தகம் நகராட்சி சார்பில், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையாளர் என்.அருள் தலைமை தாங்கினார்.  சுகாதார ஆய்வாளர் செல்வராஜ்,  பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இதில், நகராட்சி ஆணையர் அருள் மாணவிகளிடையே பேசுகையில், ‘என் குப்பை என் பொறுப்பு, நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை மக்களின் பங்களிப்பு, மரம் வளர்ப்பு அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் நகரில் வாழும் மாணவ - மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசையுடன் கூடிய பாட்டுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளது’ என்றார்.  

இந்த போட்டியில் கலந்து கொள்ள  வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு அதில்  தாங்கள் வரைந்த ஓவியம் மற்றும் இசையுடன் கூடிய பாடல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம்,  இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசு ரூ.1000  ஐந்து நபர்களுக்கு வழங்கப்படும் என்பன போன்ற விவரங்களை மாணவர்களிடையே  தெரிவிக்கப்பட்டது.

மக்கள் இயக்க பணியில், என்.எஸ்.எஸ்  மாணவிகளை பங்கேற்று பொதுமக்களிடையே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்யுமாறு கோரப்பட்டது.  நிகழ்ச்சியின், இறுதியாக என் குப்பை என் பொறுப்பு என மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: