மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் உள்ளது. மாவட்டத்திலேயே பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  உடையாமல் கோதண்டராமர் காப்பாற்றியதாகவும் இதனாலேயே, ஏரிகாத்த கோதண்டராமர் என பெயர் பெற்றதாகவும் வரலாறுகளில் கூறப்படுகிறது.

இந்த ஏரிகாத்த கோதண்டராமர் கோயிலின் பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை மங்கல இசை முழங்க கருணாகரப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து  கோயில் கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கொடி மரத்தில் கொடியை ஏற்றினர். மேலும், இந்த கோயிலில் வருகின்ற 8ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் கருடசேவை நிகழ்ச்சியும், 13ம் தேதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளை ஒட்டி கோயில் கோபுரம், சுவாமிகளின் சன்னதிகள் ஆகியவை வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், மதுராந்தகம் நகர பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: