செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ‌.வேலு ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதியதாக செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிரிக்கப்பட்டு மாநிலத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை புதுப்பித்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, வேதநாராயணபுரம் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.119 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில், சுமார் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தநிலையில் அடுத்த மாதம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டிடம் கீழ்த்தளம் மற்றும் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணிகள் முடியும் தருவாயில் இம்மாதம் 27ம் தேதிக்குள் பணிகளை முடித்து அரசிடம் ஒப்படைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டிடத்தின் முழு வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து  அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்,  பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் நாகராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஞ்சீவனா உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: