இமாச்சலத்தில் மேக வெடிப்பு: 4 பேர் வெள்ளத்தில் மாயம்

சிம்லா:  இமாச்சலில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பினால் கனமழை பெய்தது. இதனால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் அடித்து செல்லப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமாகி வருகிறது. கடந்த மாதம் அசாம், திரிபுராவில் பெய்த மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அசாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் பகுதியில் நேற்று காலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சல்லால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோஜ் கிராமத்தில் 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்பதற்காக மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர். ஆனால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மீட்பு பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, அவர்கள் அங்கு சென்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: