டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு

ராய்ப்பூர்: ராகுல் மீது அவதூறு பரப்பியதாக கைதான டிவி தொகுப்பாளர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார். இந்த விவகாரத்தில் உ.பி, சட்டீஸ்கர் போலீசாரின் ஆடு, புலி ஆட்டத்தால் பரபரப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்பந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ மூத்த தலைவர்கள் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதேபோல், ராகுல் வீடியோ குறித்து தவறான கருத்தை தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரோகித் ரஞ்சன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்பட பல்வேறு மாநில காவல் நிலையங்களில் அவர் மீது காங்கிரசார் புகார் கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், டெல்லி அருகே இந்திராபுரத்தில் உள்ள தொகுப்பாளர் ரஞ்சன் வீட்டிற்கு உத்தரப்பிரதேச போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சென்று கைது செய்தனர். அந்நேரத்தில், சட்டீஸ்கர் போலீசாரும் அவரை கைது செய்ய முயன்றனர். இதனால், இருமாநில போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இறுதியாக உத்தரப் பிரதேச போலீசார், ரோகித்தை அழைத்து சென்று விசாரித்து, நேற்று அதிகாலை ஜாமீனில் விடுவித்தனர். இந்த தகவலறிந்து சட்டீஸ்கர் மாநில போலீசார் ரோகித்தை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாகி இருந்தார். பொதுவாக, இருமாநிலத்திலும் வழக்குகள் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும் போது மற்ற மாநில போலீசாரிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது தகவல் கொடுக்க வேண்டும்.

ஆனால், உத்தரப்பிரதேச போலீசார் அதை செய்யவில்லை. இதனால், அவரை உத்தரப் பிரதேச போலீசாரே ரகசிய இடத்தில் வைத்து கொண்டு, தலைமறைவாகி விட்டதாக தகவல் பரப்பி விடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி உள்ளது. அதே நேரம், சட்டீஸ்கர் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நடந்த மாநிலங்களவை தேர்தலில், ரோகித் பணியாற்றும் டிவி நிறுவனத்தின் உரிமையாளர், பாஜ ஆதரவுடன் போட்டியிட்டு தோற்றார். இதனால், அந்நிறுவன பணியாளரை பாதுகாக்கும் முயற்சியில் உ.பி போலீசார் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. டிவி தொகுப்பாளர் விவகாரத்தில் இருமாநில போலீசாரின் ஆடு புலி ஆட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராகுல் விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ரோகித் வழக்கு தொடர்ந்துள்ளார். இது நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘டிவி நிகழ்ச்சியின் போதே ரோகித் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டு விட்டார். அவரை உபி போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். சட்டீஸ்கர் போலீசாரும் அவரை கைது செய்ய முயற்சிக்கின்றனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என ரோகித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்தனர்.

Related Stories: