இறக்குமதி செய்த நிலை மாறியது பொம்மைகள் ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரிப்பு: மோடியின் திட்டத்தால் பலன்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது, இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. குழந்தைகளின் விளையாட்டு சம்பந்தப்பட்ட இந்த துறையில், பல லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடப்பதை கண்ட பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் பொம்மை தயாரிப்பை ஊக்கப்படுத்தி வருகிறார். இதற்கு, கடந்த சில ஆண்டுகளாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது அவைகள் பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது குறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு: மூன்று சக்கர சைக்கிள், ஸ்கூட்டர்கள், பெடல் கார்கள் மற்றும் அதை போன்ற வண்டிகள், எலக்ட்ரிக் ரயில், வீடியோ கேம், பில்லியர்ட்ஸ், காசினோ கேம்ஸ், கிறிஸ்துமஸ், கார்னிவல் மற்றும் பொழுது போக்கு பொம்மை பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.2930 கோடி இருந்தது. இது 2021-22ம் ஆண்டில், ரூ.876 கோடி ஆக குறைந்துள்ளது. ஏறக்குறைய 70.35 சதவீத பொம்மை இறக்குமதி குறைந்துள்ளது.அதேசமயம், மூன்று சக்கர சைக்கிள், ஸ்கூட்டர்கள், பெடல் கார்கள் போன்றவை இறக்குமதி 2018-19ம் ஆண்டில் ரூ.2,400 கோடி ஆக இருந்தது. இது, 2021-22ம் ஆண்டில் ரூ.284 கோடி குறைந்துள்ளது.

 

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளின் ஏற்றுமதி 61.38 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று சக்கர சைக்கிள், ஸ்கூட்டர்கள், பெடல் கார்கள் மற்றும் அதை போன்ற வண்டிகள், எலக்ட்ரிக் ரயில், வீடியோ கேம், பில்லியர்ட்ஸ், காசினோ கேம்ஸ், கிறிஸ்துமஸ், கார்னிவல் மற்றும் இதர பொழுது போக்கு பொருட்கள் ஆகியவற்றின் பொம்மை ஏற்றுமதி கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.1595 கோடி இருந்தது. 2021-22 ஆண்டில் ரூ.2417 கோடி அதிகரித்துள்ளது. மூன்று சக்கர சைக்கிள், ஸ்கூட்டர்கள், பெடல் கார்கள் ஏற்றுமதி 2018-19ம் ஆண்டில் ரூ.861 கோடி இருந்தது. 2021-22ம் ஆண்டில் இது ரூ.1,398 கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: