அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேச்சு கேரள அமைச்சர் ராஜினாமா

திருவனந்தபுரம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய கேரள அமைச்சர் சஜி செரியான் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் மீன்வளம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். சில தினங்களுக்கு முன் இவர் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘மக்களை கொள்ளையடிப்பதற்காகவும், துன்புறுத்துவதற்காகவும் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் உதவுகிறது. ஆங்கிலேய காலத்தில் ஆங்கிலேயர்கள் கூறியதைத்தான் இந்தியர்கள் அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்துள்ளனர்’ என்று கூறினார். அவர் பதவி விலகக் கோரி கேரளாவில் காங்கிரஸ், பாஜ, எஸ்டிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இந்த விவகாரம் நேற்று கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.

நேற்று சட்டசபை தொடங்கியதும் அமைச்சர் சஜி செரியான் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அடம் பிடித்த  சஜி செரியான், சீதாராம் யெச்சூரி உட்பட முக்கிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நேற்று மாலை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை அவர் நேற்று மாலை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தார். செரியான் அளித்த பேட்டியில், ‘அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. நான் பேசிய சில கருத்துக்களை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டது தான் பிரச்னைக்கு காரணம்’ என்று கூறினார்.

Related Stories: