காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16.12 கோடியில் 872 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு துறை சார்பில் 872 பயனாளிகளுக்கு ரூ.16.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் முன்னிலை வகித்தனர். இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பல்வேறு துறைகள் சார்பில் 872 பயனாளிகளுக்கு ரூ.16.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய் துறை சார்பில் 180 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 159 மனுக்களும், பிற துறைகள் சார்பில் 75 மனுக்களும் என 424 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. 328 பயனாளிகளுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 100 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.38,000 மதிப்பிலான திருமண உதவித்தொகை, 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 79 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3.08 கோடி மதிப்பில் வங்கிக்கடன், 5 பயனாளிகளுக்கு ரூ.37.80 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், ரூ.4.27 கோடி மதிப்பில் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள், கால்வாய் அமைத்தல், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

6 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் சிறு தொழில் கடன், 10 பயனாளிகளுக்கு ரூ. 49 ஆயிரம் மதிப்பில் சலவை பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு ரூ.49 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், கால்நடை துறை மூலம் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் 20 விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ. 3.82 லட்சம் ஆடுகள் வழங்கப்பட உள்ளது, 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடியில் வீடு கட்டுவதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது, 2 பயனாளிகளுக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் கடனுதவி, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடன் உதவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.1.15 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் என 872 பயனாளிகளுக்கு ரூ.16.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக தமிழக முதல்வர் உழைத்து வருகிறார். அனைத்து துறைகளிலும் பொதுமக்கள் பயன்பெறகூடிய வகையில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன. அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17,202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.77.49 கோடி மதிப்பில் 22,251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தா.மோ.அன்பரசன் பேசினார்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.தேவி, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா, ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: