லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு இலங்கை அமைச்சர் ராஜினாமா: பிரதமர் ரணில் பதவி விலகக்கோரி போர்க்கொடி

கொழும்பு: இலங்கையில் விமான நிலையப் பணிக்காக ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய புகாரை தொடர்ந்து, அமைச்சர் ராஜினாமா செய்தார். இலங்கையில் நிலவும் கடும் நெருக்கடிக்கு இடையே ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில், ‘பிரதமர் பதவியை வழங்குங்கள். இன்றும் 6 மாதங்களில் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இத்திட்டம் வெற்றியளிக்கும் என்றால் உடனடியாக பதவியை விலக நான் தயாராக உள்ளேன்’ என்று கூறினார்.   

இந்நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் தைசி நிறுவனத்திடம், அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரியதாக பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். இதையடுத்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் டி சில்வா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, அதிபர் கோத்தபயவுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், ‘லஞ்சம் கோரியதாக என் மீது நேரடியாக குற்றம் சுமத்தப்படவில்லை என்றாலும்,  பாரபட்சமற்ற விசாரணையை அனுமதிக்கும் நோக்கில் பதவி விலகுறேன்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சரான தம்மிக்க பெரேரா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நிதியமைச்சர்  பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், ‘விக்கிரமசிங்கே நாட்டிற்கு டாலர் வருவதைத்  தடுக்கிறார். அந்நிய செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரிடம் பணப்  புழக்கத் திட்டம் இல்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்க ரணில்  மறுத்துவிட்டார்.

புடினுடன் கோத்தபய திடீர் பேச்சு

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல நாட்கள் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதுவரை வரிசையில் காத்திருந்த 12 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதற்கான கடன் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினிடம், அதிபர் கோத்தபய நேற்று தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories: