சர்வதேச சந்தையில் வீழ்ச்சி சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 குறைகிறது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: சமையல் எண்ணெய் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்று அனைத்து எண்ணயெ் நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதலாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஒன்றிய உணவுதுறை செயலாளர் சுதான்சு பாண்டே கூறுகையில், ‘‘சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்துதான் நாம் இறக்குமதி செய்கிறோம். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தையடுத்து நாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்  சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது. இதையடுத்து, கடந்த மாதம் சமையல் எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. தற்போது சர்வதேச அளவில் விலை மேலும் குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தினரை அழைத்து பேசப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் 10 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு கொடுக்குமாறு எண்ணெய் உற்பத்தியா ளர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.இதை தொடர்ந்து, பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படும். அடுத்த வாரத்துக்குள் விலை குறைக்கப்படும் என்று எண்ணெய் உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.  அதே போல் ஒரு பிராண்ட் எண்ணெயின் விலை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒரே சீரான விலையில் விற்கும்படி அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது’’ என்றார்.

Related Stories: