வரலாறு காணாத அளவில் உச்சம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: சென்னையில் ரூ.1,068.50க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று திடீரென ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.ரூ.1068.50, சேலத்தில் ரூ.1086.50 என்று அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

கடந்த மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் மாற்றம் செய்யவில்லை. மே மாதம் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயையும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தையும் தாண்டியது. ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ.134 குறைக்கப்பட்டது.

இம்மாதம் (ஜூலை) 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலையை மட்டும் ரூ.187 குறைத்தனர். இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1018.50க்கும், சேலத்தில் ரூ.1036.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. வர்த்தக சிலிண்டர் சென்னையில் ரூ.2,181.50க்கு விற்பனையானது. இந்நிலையில் எண்ணணெய் நிறுவனங்களில் கூட்டமைப்பு நேற்று திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 உயர்த்தியது. இதனால் வரலாறு காணாத புதிய உச்சத்தை வீட்டு உபயோக காஸ் கிலிண்டர் விலை தொட்டுள்ளது. சென்னையில் ரூ.1018.50ல் இருந்து ரூ.50 அதிகரித்து ரூ.1068.50 என்றும், சேலத்தில் ரூ.1036.50ல் இருந்து ரூ.1086.50ஆக உயர்ந்துள்ளது. இதே போல் டெல்லியில் ரூ.1053, கொல்கத்தாவில் ரூ.1078ஆகவும், மும்பையில் ரூ.1052.50ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.8 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.2177.50ஆகவும், சேலத்தில் ரூ.2131 ஆகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே டெல்லியில் ரூ.2,012.50ஆகவும், மும்பையில் ரூ.1,972.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,132 ஆகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ம்தேதி விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாததால் பழைய விலையிலேயே சிலிண்டர் வாங்கி கொள்ளலாம் என்று மக்கள் எண்ணியிருந்தனர். ஆனால் திடீரென நேற்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50அதிகரிக்கப்பட்டது, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிலும் ஒருசிலிண்டரின் விலை ரூ.1100ஐ தொடும் அளவுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். காஸ் விலை உயர்வு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலையேற்றத்தில் ஒரு ‘புது டெக்னிக்’

சமீபகாலமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மட்டும் 1ம்தேதி விலை ஏற்றத்தை மேற்கொள்ளாமல், அதே விலையில் நீடிப்பது போல அறிவித்துவிட்டு, இடையில் 4, 6, 15 போன்ற தேதிகளில் அரசு விலையை உயர்த்துகின்றது. மாதம் தோறும் 1ம்தேதியன்று புதிய விலையை பொதுமக்கள் கவனிக்கும் நிலையில், இடையில் மாற்றினால் கண்டுகொள்ள மாட்டார்கள் என கருதி, இந்த புதிய டெக்னிக்கை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 131 டாலருக்கு மேல் விற்கப்படுகிறது. இவ்விலை குறையாமல் தொடர்ந்து அதிகரிப்பதால் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: