குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி கைது

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி விஜயா வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் குமார் சாவில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததால் விஜயாவிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:  குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த குமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதில் குமார் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது.

மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கணவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. மேலும் விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் வேறு ஒரு நபருடன் தொடர்பில் அவர் இருந்ததும் தெரியவந்தது. எனவே இந்த கொலை சம்பவத்தில் அந்த நபருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை வளசரவாக்கம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: