கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி

திருத்தணி:  திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு வழியாகத்தான் கலைஞர் நகர், முருகப்பாநகர், ராதாகிருஷ்ணன் தெரு கச்சேரி தெரு உள்பட பல பகுதிகளுக்கு மக்கள் சென்றுவருகின்றனர். மேலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் மேற்கண்ட பகுதி வழியாகத்தான் காய்கறி, பூ மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் வசித்துவரும் நிரஞ்சன் என்பவர் வீடு கட்டி வருகிறார்.

இதற்காக இவர் தனது வீட்டின் முன் ஜல்லி கற்கள், மணல் ஆகியவற்றை கொட்டிவைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில், மக்கள் நடந்து செல்வதற்குகூட முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் கடையை திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி யாராவது கேட்டால் நிரஞ்சன் மிரட்டுவதாக தெரிகிறது. அவரது வீட்டின் முன் நிறுத்தப்படும் வாகனங்களை பஞ்சராக்கிவிடுகிறார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; நிரஞ்சன் வீட்டின் முன்பு யாராவது பைக், கார்களை நிறுத்தினால் பஞ்சராக்கிவிடுகிறார். யாராவது தட்டிக்கேட்டால் அடாவடியாக பேசுகிறார். இதுமட்டுமின்றி அவரது வீட்டு வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. எதிரில் உள்ள வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அவர்கள் வீட்டில் இருந்து கழிவுநீர் பைப் லைன் அந்த கால்வாயுடன் இணைத்தபோது ஓய்வுபெற்ற ஆசிரியரை கீழே தள்ளிவிட்டதுடன் அடித்து உதைத்துள்ளார்.

நிரஞ்சனை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாத நிலைமை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். யாருக்கும் பாதிப்பில்லாமல் பணி செய்யவேண்டும். திருட்டு கரன்ட் மூலம் வீட்டு வேலைகளை செய்து வருகிறார். எனவே, அவர் மீது மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: