விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விமர்சனங்களை புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான வகையில், மக்கள் பணியை தொடர வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஓராண்டுகாலத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள திமுக ஆட்சி, ஓய்வின்றித் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது நமது அரசு. அதன் பணிகளும், பயன்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரை சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனை உறுதிசெய்வதற்காகத்தான் மாவட்டந்தோறும் பயணித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறேன்.

பொதுவாக, அரசு நிகழ்ச்சி என்றாலும் அதற்கான பயண வழியில் வரவேற்பு என்றாலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்வரிடம் அளித்து, “எனக்கு இதைச் செய்து கொடுங்க” என்றுதான் கேட்பார்கள். ஆனால், திருப்பத்தூர் நிகழ்வில் சந்தித்த பொதுமக்கள் பலரும், “உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்களே, நல்லாயிட்டீங்களா? உடம்பை நல்லா பாத்துக்குங்க. கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்க” என்றுதான் அக்கறையுடன் தெரிவித்தனர். உடல்நலன் காக்கும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

சென்னை திரும்பிய அன்று மாலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மதவெறிச் சக்திகளுக்கு எதிரான பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள யஷ்வந்த் சின்ஹா ஆதரவு திரட்டிட நேரில் வந்திருந்தார். அவருக்கு அறிவாலயத்தில் வரவேற்பளித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து ஆதரவை உறுதிசெய்து, வெற்றிக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தேன். கரூரில் பயனாளிகளுக்கான நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றபோது சற்று ‘மிரண்டு’தான் போனேன். கரூர் மாவட்ட நலத்திட்டப் பணிகள், அடிக்கல் நாட்டிய திட்டங்கள், தொடங்கி வைத்த திட்டங்களின் மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,100 கோடி. விருந்தினர் விடுதியில் சந்தித்த தொழிலதிபதிர்கள் - உழவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் சிலவற்றை அறிவிப்புகளாகவும் விழா மேடையிலேயே அறிவித்தேன்.

அருந்ததியின மக்கள் அதிகம் வசிக்கும் சிலுவம்பட்டி என்ற பகுதிக்கு சென்றேன். அங்கே ஓர் இளைஞர், “தலைவர் கலைஞரின் ஆட்சியில் வழங்கப்பட்ட 3% உள்ஒதுக்கீட்டால் ஹோமியோபதி மருத்துவம் படித்தேன்” என்றார் நன்றியுணர்வுடன். எல்லாரும் ஆர்வத்துடன் வந்து, நம் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டினால்தான் இந்த அளவிற்கு உயர்படிப்புகளைப் படிக்கும் தலைமுறையாகியிருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்லும் நிலையில் இருந்தனர்.

ஜூலை 4 முதலீட்டாளர்கள் மாநாடு. உண்மையான - முழுமையான முதலீட்டையும், அதற்கேற்ற தொழில்களையும், அவை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் கழக ஆட்சியில் தமிழ்நாடு கண்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இந்திய மாநிலங்களில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது நமது தமிழ்நாடு. உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடம்பரக் கூத்துகளை அரங்கேற்றிய முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், மாநாட்டுக்கு அத்தியாவசியமான - நேர்த்தியான ஏற்பாடுகளுடன் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட 6 முதலீட்டாளர் மாநாடுகளின் வாயிலாக ரூ.2 லட்சத்து 20ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போர் விமர்சனங்களைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியைத் தொடர்ந்திட வேண்டியது நமது கடமை. நாமக்கல் மாநாட்டில் நான் சொன்னதுபோல, ‘தி.மு.கவினர் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம்’ என்பதற்கேற்ப - கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அவை மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறுகின்றன. அதன் நோக்கம், மக்களை சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.

Related Stories: