திருவலம் அருகே கல்லூரிக்கு சென்றபோது நடுரோட்டில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: பைக்கில் தப்ப முயன்ற மாணவன் கைது

திருவலம்: திருவலம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு நடுரோட்டில் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதுமாணவியை காதலித்து வந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன், கூலித்தொழிலாளி. இவரது மகன் சதீஷ்குமார்(20). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் கண் சிகிச்சை துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது வீடு அருகே வசிக்கும் 18 வயது இளம்பெண், ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் ரெக்கார்ட் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சதீஷ்குமாரிடம் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளார். மேலும் வேறு ஒருவரிடம் அடிக்கடி பேசியுள்ளார். நேற்று மாணவி தனியார் மருத்துவமனைக்கு பஸ்சில் செல்ல, தோழியுடன் மொபட்டில் திருவலம் பஜார் வீதிக்கு வந்தார். அங்கிருந்து திருவலம் பஸ்நிலையத்துக்கு நடந்து சென்றபோது, பின்தொடர்ந்து வந்த சதீஷ்குமார், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரி குத்தியுள்ளார்.

பின்னர், அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது, கத்தியை வீசிவிட்டு மொபட்டில் தப்பியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த திருவலம் போலீசார் வந்து மாணவியை குத்த பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். அருகிலுள்ள பகுதியில் மறைந்திருந்த சதீஷ்குமார், போலீசாரை பார்த்ததும் மொபட்டில் தப்பி சென்றார். அவரை போலீசார் பைக்கில் துரத்தி சென்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: