இன்ஸ்டாகிராம், மூலம் பழக்கமான 16 வயது சிறுவனுடன் மாயமான 5-ம் வகுப்பு மாணவி

திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 16 வயது மாணவனுடன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் நகரின் மையப் பகுதியில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 10 வயதான ஒரு மாணவி 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மாணவி உடல்நலக் குறைவு காரணமாக நாளை பள்ளிக்கு வர முடியாது என்று கூறி வகுப்பு ஆசிரியையின் போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் வழக்கம் போல நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு அந்த மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளிக்கு முன்பு வேனில் இருந்து இறங்கிய மாணவியை அதன் பிறகு காணவில்லை. இந்த மாணவி வேனில் வந்ததை இன்னொரு மாணவி பார்த்துள்ளார். அவர் இது குறித்து வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, பள்ளி முழுவதும் மாணவியை தேடிப் பார்த்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவி மாயமானதால் யாராவது கடத்திச் சென்றிருக்கலாமோ? என்று பயந்து இது குறித்து பள்ளியின் முதல்வர் கண்ணூர் சிட்டி போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் கண்ணூர் நகரம் முழுவதும் மாணவியை தேடும் பணியில் இறங்கினர்.

பள்ளிக்கு வந்த பிறகு 5ம் வகுப்பு மாணவி மாயமான தகவல் கண்ணூர் நகர் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக்களும் மாணவியை பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். இதற்கிடையே கண்ணூர் நகரில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். பல மணி நேர பரிசோதனைக்கு பிறகு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுடன் மாணவி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பந்தப்பட்ட சினிமா தியேட்டருக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தான் மாணவி எப்படி மாயமானார் என்று விவரம் தெரியவந்தது. மாணவியுடன் தியேட்டரில் வைத்து பிடிபட்ட அந்த 16 வயது சிறுவனுக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள மலையின்கீழ் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல மாதங்களாக இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து வந்துள்ளனர். கடைசியில் 2 பேரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை சந்திப்பதற்காக சிறுவன் திருவனந்தபுரத்திலிருந்து கண்ணூருக்கு புறப்பட்டான்.

ஆனால் கைச்செலவுக்கு பணம் இல்லாததால் வீட்டில் வளர்த்து வந்த முயல்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் ரயில் ஏறி சிறுவன் கண்ணூருக்கு புறப்பட்டான். நேற்று காலை பள்ளியின் முன்பு காத்திருந்த சிறுவன், மாணவியை சந்தித்து பிறகு அங்குள்ள தியேட்டருக்கு அழைத்துச் சென்று உள்ளான். பள்ளி சீருடையுடன் தியேட்டருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்த மாணவி, தியேட்டர் கழிப்பறையில் வைத்து வீட்டிலிருந்து தயாராக கொண்டு வந்த வேறு உடையை மாற்றியுள்ளார். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கண்ணூர் நகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: