தொடர் மழையால்; ஊட்டி பூங்கா புல் மைதானத்திற்குள் நுழைய தடை

ஊட்டி: தொடர் மழையால் சேறு, சகதியாக மாறியதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில், முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் காணப்படும்.

அனைத்து புல்மைதானங்களும் சீரமைக்கப்பட்டு பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும். இதில், சுற்றுலா பயணிகள் ஆடிப்பாடி விளையாடுவது வழக்கம். குறிப்பாக குட்டீஸ்கள் விளையாடி மகிழ்வது வாடிக்கை. இம்முறையும் பூங்காவில் அனைத்து புல்மைதானங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இம்முறை மழை பெய்ததால் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சேறும் சகதியுமாகி மாறியது. இதிலேயே சுற்றுலா பயணிகள் சென்று வந்த நிலையில், புல்மைதானங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால், கடந்த மாதம் சில நாட்கள் பெரிய புல்மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் அடித்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், புல்மைதானங்களை சீரமைக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அமர கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பெரிய புல்மைதானம் மற்றும் பெர்னஸ் புல்மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிறிய புல்மைதானமும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், தற்போது சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து சென்றபடியே பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர். எங்கும் அமர்ந்து ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: