விலை போகாத விருப்பாச்சி கொய்யா; விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரித்துள்ளதாலும், நுகர்வு குறைவு காரணமாகவும் ஒட்டன்சத்திரம் சந்தையில் கொய்யா விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாசரிப்பட்டி, வேலூர் அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டினம்புதூர், விருப்பாச்சி சத்திரப்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமானோர் கொய்யா நடவு செய்துள்ளனர்.

கொய்யா வருடம் முழுவதும் விளைச்சல் தரும் பயிராகும். தற்பொழுது இப்பகுதியில் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றுக்கு உரிய விலை கிடைக்காததால், சந்தையில் பெருமளவில் பழங்கள் தேக்கமடைந்துள்ளன. கடந்த மாதம் 23 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.400 முதல் ரூ.500 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது வரத்து அதிகரிப்பால், ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.100முதல் ரூ.120 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கொய்யா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து கொய்யா வியாபாரி செல்வம் கூறுகையில், ‘‘வரத்து அதிகரித்துள்ளதாலும், நுகர்வோர் குறைவாக இருப்பதாலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: