தனியார் ஓட்டலில் கெட்டுப் போன இறால், மட்டன், மீன், சிக்கன் பறிமுதல்: அண்ணாநகரில் பரபரப்பு

அண்ணாநகர்: அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் கெட்டுப்போன மட்டன், சிக்கன், இறால் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் அண்ணாநகர் 14வது அவென்யூவில் உள்ள பிரபல  ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வைத்த இறைச்சி உணவு கெட்டுப்போனதாக இருந்ததால் ஊழியரிடம் கேட்டுள்ளார். அப்போது ஊழியர் இங்கே நிறைய பேர் வந்து சாப்பிடுகிறார்கள் நீங்கள் ஒருவர்தான் குறை கூறுகிறீர்கள் என்று கூறியதால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகுமார் தனது செல்போனில் கெட்டுப்போன இறைச்சியை படம் பிடித்து அவற்றை வாட்ஸ் அப் மூலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அதிகாரி சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமராஜ தலைமையில், 10க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்தனர். அங்குள்ள இறைச்சிகளை சோதனை செய்தபோது சிக்கன், மட்டன் மற்றும் இறால் உள்ளிட்டவை கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. அங்கிருந்து சுமார் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று கூறி சமையல் கூடத்தை மூடி விட்டு சென்றனர்.

Related Stories: