ஜி.எஸ்.டி வரி உயர்வு, செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம்: நாளை மறுநாள் நடைபெறுகிறது

சென்னை: ஜி.எஸ்.டி வரி உயர்வு, செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். கடந்த ஜுன் 28, 29 தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி உயர்வு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில செஸ் வரி விதிப்பை எதிர்த்தும், மாநிலம் தழுவிய வணிகர்களின் குரலுக்கு மதிப்பளித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து, அவசர ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 8-07-2022 வெள்ளிக்கிழமை காலை சரியாக 10.00 மணியளவில் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல்,  எண்.12ஏ, நேரு சாலையில் உள்ள லயாலி குளோபல் குசின் ரெஸ்ட்டாரண்டில் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், பழைய பொருள் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க உள்ளனர். பிராண்டட் என்பதற்கு மாற்றாக உரைகளில் பாக்கிங் செய்து சீலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, மைதா, தயிர் போன்ற  பொருட்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரிவிதிப்பு,  ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தங்கும் விடுதி அறைகளின் வாடகை மீது 12 சதவிகித வரிவிதிப்பு, அஞ்சலக சேவைகளுக்கும் 5 சதவிகிதம் வரி விதிப்பு, மற்றும் வேளாண் விளைபொருள் சட்டத்தில்  23-4-2022 தேதியிட்ட அரசாணை எண்.84அத்தியாவசிய 40 வேளாண்விளை பொருட்களுக்கும் வரி விதிப்பு போன்றவற்றால் சிறு, குறு வணிகர்கள், விவசாயிகள்  பாதிப்பதுடன், விலைவாசி உயர்வால் பொதுமக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்களும், தினக்கூலிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: