சாக்கடையில் இறங்கி ஆளுங்கட்சி எம்எல்ஏ போராட்டம்: ஆந்திராவில் பரபரப்பு

நெல்லூர்: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  எம்எல்ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி சாக்கடையில் இறங்கி  நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் தொகுதிக்கு உட்பட்ட உம்மாரெட்டிகுண்டா பகுதியில்  கடந்த 10 ஆண்டுகளாக சாக்கடை நீர் வடிகால் பிரச்னை இருந்து வந்தது. ரயில்வே தண்டவாளத்திற்கு அருகிலேயே இந்த வாய்க்கால் அமைந்துள்ளதால், வடிகாலில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்பகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏ  கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, சாக்கடையில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து வந்து, எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பத்து நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து எம்எல்ஏ போராட்டத்தை வாபஸ் பெற்றார். உம்மாரெட்டிகுண்டாவின் எம்எல்ஏ ஒருவர் சாக்கடையில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: