திருவலம் பஜார் வீதியில் இன்று காலை பரபரப்பு, மருத்துவ கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து; வேறு நபருடன் பேசியதால் காதலன் வெறிச்செயல்

திருவலம்: திருவலம் பஜார் வீதியில் இன்று காலை நடந்து சென்ற மருத்துவ கல்லூரி மாணவியை வழிமறித்த காதலன் சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அவரை போலீசார் விரட்டி சென்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்ஆர்டி பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (20), வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் கண் மருத்துவ பிரிவில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

சதீஷ்குமாரும், மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவி, கடந்த சில மாதங்களாக வேறு ஒரு நபருடன் பேசி வந்தாராம். இதையறிந்த சதீஷ்குமார், மாணவியை கண்டித்ததாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நபருடன் பேசி வந்தாராம். இதனால் சதீஷ்குமார் கடும் கோபத்தில் இருந்துள்ளார். மாணவி இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு தனது வீட்டில் இருந்து திருவலம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த சதீஷ்குமார், மாணவி மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, சதீஷ்குமாரிடம் இருந்து தப்பித்து பஜார் வீதி வழியாக ஓடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் பைக்கை நிறுத்திவிட்டு, மாணவியை விரட்டி சென்று திருவலம் காவல் நிலையம் அருகே மடக்கி பிடித்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரி குத்தியுள்ளார். படுகாயமடைந்த மாணவி, அலறி துடித்தபடி மயங்கி விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள், சதீஷ்குமாரை பிடிக்க முயன்றனர். அவர் தனது பைக்கில் தப்பி சென்றனர். படுகாமயடைந்த மாணவியை மீட்ட பொதுமக்கள், வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த திருவலம் போலீசார், தங்களது வாகனங்களில் தப்பி ஓடிய சதீஷ்குமாரை விரட்டிச்சென்றனர்.  

ராணிப்ேபட்டை மாவட்டம் சென்னை-சித்தூர் சாலை சீக்கராஜபுரம் கூட்ரோட்டில் சதீஷ்குமாரை மடக்கி பிடித்து காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் வீதியில் இளம்பெண்ணை, காதலன் விரட்டி சென்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: