நாகை அருகே பயங்கரம், இரு கிராம மீனவர்கள் மோதல் வீடுகள் சூறை, பைக்குகள் உடைப்பு நள்ளிரவில் சாலை மறியல்; அதிவிரைவு படை குவிப்பு

நாகை: நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பட்டினச்சேரியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதமாக பிரச்னை இருந்து வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென மேலபட்டினச்சேரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த சமாதான கூட்டத்தில் மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் அதிகாரிகளால் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்பட்டது.

இருப்பினும் இருதரப்பு மீனவ கிராமங்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மேலபட்டினச்சேரி கிராமத்துக்குள் கீழபட்டினச்சேரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ேடார் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென புகுந்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கீழபட்டினச்சேரியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதைதொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகூர் வெட்டாறு பாலம் அருகில் மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து 2 மணி நேரத்துக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் மேலபட்டினச்சேரி கிராமத்தில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு கீழபட்டினச்சேரியை சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் மேலபட்டினச்சேரிக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்து நாகை எஸ்பி ஜவஹர் தலைமையில் மோதல் நடந்த பகுதியில் அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது ஆயுதங்களுடன் 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து மோதலில் காயமடைந்த 2 கிராமங்களை சேர்ந்த 8 பேர் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மோதல் குறித்து 2 கிராமங்களை சேர்ந்த 15 பேர் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேலபட்டினச்சேரியில் இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: