செப்டம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ300 டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிப்பதற்கான ரூ.300 கட்டண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசன டிக்கெட் நீங்கலாக மற்ற அனைத்து கட்டண தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. குறிப்பாக 300 ரூபாய் தரிசன டிக்கெட் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு வருகிறது.

அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்கான ரூ300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் நாளை (7ம் தேதி) காலை 9 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது. இதேபோல் செப்டம்பர் மாதத்திற்கான தங்கும் அறைகளுக்கான டிக்கெட் நாளை மறுதினம் (8ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியாகிறது. ஏற்கனவே சில காரணங்களுக்காக முன்கூட்டியே நிறுத்தி வைத்திருந்த வரும் 12, 15 மற்றும் 17ம் தேதிகளுக்கான ரூ300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

ரூ4.35 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ச்சியாக நேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதனால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியிருந்தது. 9 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 73,439 பக்தர்கள் தரிசித்தனர். 34,490 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியிருந்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ4.35 கோடி காணிக்கை கிடைத்தது. தொடர்ந்து இன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories: