மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கோவை குற்றால அருவி, ஆழியார் கவியருவியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை பகுதியிலும் தொடர் மழைப்பொழிவு இருந்து வருகிறது.இந்த மழையின் காரணமாக கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கோவை குற்றாலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினர் கூறுகையில், ‘‘தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும்போது அதிவேகமான காற்று வீசுவதால் மரங்கள், கற்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை’’ என்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த அருவிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி, கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆழியார் கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான, கவர்க்கல், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியார் அணைக்கு செல்வதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Related Stories: