வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கன மழை காரணமாக பாதுகாப்பு சுவர்கள் இடிந்து, 3 வீடுகள் அந்தரத்திலும், ஒரு வீடு இடிந்தும் சேதம் அடைந்து உள்ளது. வால்பாறை நகராட்சி மைதானத்தின் அருகே 30 அடி உயர பாதுகாப்பு சுவர் மேல் புறம் இருந்த சாந்தா, ஜோசப் ஆகியோர் வீடுகள், பாதுகாப்பு சுவர் மழையால் பலவீனம் அடைந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து சரிந்தது. இன்று காலை நடந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் தப்பினர். வால்பாறை காமராஜ் நகரில், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் பாதுகாப்பு 30 அடி உயர பாதுகாப்பு சுவர் இன்று காலை சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு சுவர் இடிந்ததால் மலைச்சரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா குடியிருப்பு பகுதியில் சாந்தி என்பவர் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. சம்பவம் அறிந்த வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு, தாசில்தார் விஜயகுமார், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். பாதுகாப்பு சுவர்களை உடனடியாக கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 11.7 செமீ. மழை பதிவாகி உள்ளது. கீழ்நீராறு 10 செமீ. வால்பாறை 7.8செமீ, சோலையார் அணை 7.2 செமீ. மழை பதிவாகி உள்ளது.

Related Stories: