பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், மாடுகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். கடந்த மாதம் துவக்கத்திலிருந்து சில வாரமாக சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. மேலும், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால், மாடுகள் விற்பனை மந்தமானது. பின், கடந்த வாரம் முதல் வெளி மாநிலங்களிலிருந்து சந்தைக்கு மாடு வரத்து அதிகரிக்க துவங்கியது.

இதில், நேற்று நடைபெற்ற சந்தை நாளின்போது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக வழக்கத்தைவிட  சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும், வரும் 10ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், மழையையும் பொருட்படுத்தாமல்,  மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது. மழை குறைவான கடந்த வாரத்தில் நடந்த சந்தைநாளில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் இருந்தது. அதுபோல் நேற்று, தொடர்ந்து மழை பெய்தாலும், மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகம் குவிந்ததால், கடந்த வாரத்தைபோல், இந்த வாரத்திலும் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: