×

ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் ஏழை பெண்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறை உதவியுடன் அனாதை பிணத்தை கொண்டு செல்ல, அரசு அமரர் ஊர்தியை தேடிக்கொண்டு இருந்தார் அந்த பெண். பின்னர் அந்த சடலத்தை வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று, அப்பெண்ணே தனது சொந்த செலவில் இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இதேபோல் 5000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிணங்களை அனைத்து சடங்குகளுடன் அடக்கம் செய்துள்ளார் ரோஜா. சென்னை சாந்தோம் அருகே டுமிங்குப்பத்தில் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வரும் ரோஜா இது மட்டுமில்லாமல் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவளித்து வருகிறார்.
‘‘சொந்த ஊர் சிதம்பரம். நடுத்தர குடும்பம். அப்பாவிற்கு இறால் வளர்ப்பு வியாபாரம்.

சிறு வயதிலேயே அம்மா தவறிட்டாங்க. அப்பா தான் எனக்கு எல்லாமே. ஒரு நாள் தோழிகளுடன் மைதானத்திற்கு விளையாட சென்றேன். அந்த மைதானம் அருகே ஒரு சுடுகாடு இருக்கும். அங்க அரைகுறையா புதைக்கப்பட்ட மனித உடலை நாய் கடித்து குதறிக் கொண்டு இருந்தது. நான் அப்ப ரொம்ப சின்ன பொண்ணு என்பதால், ரொம்பவே பயந்துட்டேன். அந்த சம்பவம் என்னுடைய ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அப்ப நான் சின்ன பெண் என்பதால், அது குறித்து விவரம் தெரியவில்லை. அதன் பிறகு நான் சென்னைக்கு வந்துட்டேன்.

இங்கு என் சகோதரி வீட்டில் தான் வசித்து வந்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தேன்’’ என்று கூறும் ரோஜா அதன் பிறகு தான் இந்த சேவையில் தன்னை ஈடுப்படுத்த ஆரம்பித்துள்ளார். ‘‘சின்ன வயசில் ஏற்பட்ட அந்த பாதிப்பு என் மனதில் இருந்தாலும், என் உறவினர் ஒருவர் இறந்த பிறகு ஏற்பட்ட பாதிப்பு தான் என்னை முழுமையாக இந்த சேவையில் ஈடபட ஆரம்பிச்சது. ஊரில் நெருக்கமான உறவினர். ஆனால் அவருக்கு சொந்தம் என்று சொல்லிக்க யாரும் இல்லை. அவர் இறந்த பிறகு அவருக்கான ஈமச்சடங்கு செய்யவும் யாரும் இல்லை.

அதனால் ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை நல்லடக்கம் செய்தோம். அந்த சமயத்தில் தான் எல்லாம் இருந்தும், கடைசி காரியங்களை செய்ய யாருமே இல்லாதவர்கள் இவரைப் போல் பலர் இருப்பார்கள், அவர்களை நாம் ஏன் அடக்கம் செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இவர்கள் பற்றிய விவரம் யாரிடம் கேட்பதுன்னு எனக்கு அப்போது தெரியல. என் கணவரிடம் இது குறித்து சொன்னபோது, அவர் தான் போலீஸ் அல்லது அரசு மருத்துவமனையில் விசாரித்தால் தெரியும் என்றார். அப்படித்தான் என்னுடைய சேவை ஆரம்பித்தது.

அரசு மருத்துவமனை மற்றும் காவல்நிலையங்களுக்கு அனாதை பிணம் இருப்பது குறித்த தகவல் வந்தவுடன் அவர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள். நான் அவர்கள் உதவியுடன் என் சொந்த செலவில் நல்லடக்கம் செய்துவிடுவேன். மரணத்துக்கு பிறகும் ஆதரவற்றோர் கவுரவமாக நடத்தப்படுவதில்லை என்று நினைக்கும் போது மனசுக்கு கவலையாக தான் இருக்கு’’ என்றவர் கடந்த 20 ஆண்டுகளாக இதனை செய்து வருகிறார்.

‘‘இறந்தவரின் பெயர், ஜாதி, மதம் போன்ற விவரங்கள் எதுவுமே தெரியாது. ஆனால், அவர்களை எனது உறவினர்களாக கருதியே இறுதி சடங்குகளை மேற்கொள்கிறேன். இதற்காக யாரிடமும் இதுவரை பணம் கேட்டதில்லை. நான் சம்பாதிக்கும் பணத்தை இதற்காக ஒதுக்கி விடுகிறேன். என் கணவரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நகர்கிறது. என் தந்தையும் அவ்வப்போது உதவி செய்வார். சில சமயம், ஒரே நாளில் நான்கைந்து ஆதரவற்ற பிணங்கள் வரும். அந்த சமயத்தில் கையில் காசு இருக்காது. கடனை வாங்கி இறுதி சடங்கு செய்வேன்.

இப்போது ஆதரவற்றோரின் பிணங்களை ஏற்றி செல்ல அரசு அமரர் ஊர்தி கிடைப்பதில்லை. சொந்தமாக அந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். ஆனால் போதிய காசு இல்லை. யாராவது நன்கொடையாக வழங்கினால் நல்லா இருக்கும். நானே வாகனத்தை ஓட்டி, என்னுடைய சேவையை இடறில்லாமல் தொடருவேன்’’ என்றவர் தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி ஒருவேளை உணவு வழங்கி வருகிறார்.

‘‘எங்க குடியிருப்பு கடலோரமாக இருப்பதால், கடலண்ணை தான் எங்களுக்கு எல்லாமே. எங்களுக்கு மட்டுமில்லை பல ஆதரவற்றவர்களின் இருப்பிடமும் அதுவாக தான் இருக்கிறது. இங்கு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என பலர் சுற்றித்திரிவதை பார்த்து இருக்கேன். அவங்களுக்கு யாரும் வேலை தரமாட்டாங்க. ஒரு வேளை உணவு யாராவது கொடுக்கமாட்டாங்களான்னு சுற்றி திரிவாங்க.

எனக்கு அவர்களை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். என்னால் மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்க முடியாது. அதற்கான வசதி எனக்கில்லை. ஆனால் ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியும். தினமும் ஒருவேளை சாப்பாடு மட்டும் வழங்கி வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது” என்றார் ரோஜா முகம்மலர்ந்தபடி.

Tags :
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…