கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கட்டண கழிப்பறைகள் சீரமைப்பு: முதன்மை அதிகாரி நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சுமார் 54க்கும் மேற்பட்ட கட்டண கழிப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தினர், கழிப்பறைகளை முறையாக பராமரிக்காததால் பல கழிப்பறைகளில் கதவுகள், டைல்ஸ், தாழ்ப்பாள், பக்கெட்கள் உடைந்து கிடந்தது.

பல கழிவறைகள் பயங்கர அசுத்தத்துடன், துர்நாற்றம் வீசியது. இதனால், இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால், இந்த கழிவறையை பயன்படுத்த தயங்கும் பலர், மார்க்கெட் வளாகத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம் இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக முதன்மை அதிகாரி சாந்தி நேரில் சென்று அனைத்து கழிப்பிடங்களையும் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு கழிப்பறைகளில் உடைந்த கதவுகள், டைல்ஸ்களை உடனடியாக சீரமைக்கும்படி ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். அதேபோல், கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும், என எச்சிரித்தார். அதன்பேரில், உடைந்த கதவுகள் மற்றும் டைல்ஸ்களை அகற்றி விட்டு புதியதாக கதவு மற்றும் டைல்ஸ் போடப்பட்டது. இதுகுறித்து முதன்மை அதிகாரி சாந்தி கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிப்பிடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என ஒப்பந்ததார்களிடம் எச்சிரித்துள்ளேன். அதேபோல், பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டித் தரவும் உத்தரவுட்டியுள்ளேன். கட்டண கழிப்பிடம் அசுத்தமாக இருந்தால் வியாபாரிகள் உடனடியாக அங்காடி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்,’’ என்றார்.

Related Stories: