ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆட்டோவில் வைத்து 25 கிலோ கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மூன்று பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கல்லறை சாலை-எம்.சி. சாலை சந்திப்பில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 2020 ஜூலை 18ம் தேதி போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது, ஆட்டோ ஒன்றில் மூன்று பேர் சேர்ந்து கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த பவுடர் ரவி, சின்னதுரை, பாம்பு நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி சாட்சிகள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பவுடர் ரவி, சின்னதுரை, பாம்பு நாகராஜ் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: